சென்னை-நவ.18:- லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் மரணம் காவல் நிலையத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து கடந்த வாரம் பாலகிருஷ்ணன் என்ற டிரைவர் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தேவாரத்தில் இருந்து மதுரை நோக்கி வரும் வழியில் லாரி இருந்த மூட்டைகள் தீ பற்றி எரிந்துள்ளது. அவர் உடனே அருகாமையிலுள்ள வாலாந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புகார் அளித்த டிரைவர் பாலகிருஷ்ணனை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு மேல் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் காவல் நிலைய கழிவறையில் தனது சட்டையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டு வந்த நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு காயங்கள், ரத்தக் கட்டுகள், உடலில் உள்பாகங்களில் ரத்தக் கசிவுகள், கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடயம் உள்பட ஏராளமான வெளி மற்றும் உள் காயங்கள் இருப்பது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதலால் இவ்வழக்கில் உயிரிழந்த டிரைவர் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி பாலகிருஷ்ணன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

